ஜல்லிக்கட்டு ஒழிப்பா நாட்டுமாடு அழிப்பா?
தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவாதத்தில் பெரும்பாலும் ஆதரவு குரல் கொடுப்பவர்கள் மாடு வளர்ப்பவர்கலாகவோ, விவசாயம் சார்ந்த தொழிற் குடும்பத்தினராகவோ இருக்கிறார்கள். எதிர் குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் விவசாயத்திற்கு சம்பந்தம் இல்லாத தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள்.
நான் சிறுவனாக இருக்கும் பொழுது “மாடு பிடி” என்று ஒரு
நிகழ்வு இருக்கும். தை பொங்கலுக்கு பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் பொது பெரிய
பெரிய வடங்களை கடைகளில் வாங்கி காளைகளை பிடித்து வருவார்கள். சில மாடுகளை வீட்டு
பெண்கள் தடவி கொடுத்து பிடித்து வருவது எங்களின் அதிக நாட்களின் பேசு பொருளாக
இருக்கும்.
பிடித்து வந்த
காளைகளை தனியாக “தொளுவுகளில்” அடைத்திருப்பார்கள். அதற்கு ஒன்றிரண்டு மதங்களுக்கு
முன்பே “மலை” மாடுகளை மலைகளிலிருந்து காடுகளில் “கிடை” அமத்தி இருப்பார்கள்.
ஜல்லிக்கட்டின் முதல் நாள் எல்லா “பளிஞ்சி” மாடுகளையும்
வாடிவாசல் வழியாக ஓட விடுவார்கள். அன்று பெரிய காளைகள் வராது எனவே சிறிய “காளைகள்”
கன்று குட்டிகளை “அணைந்து” பயிற்சி கொள்வார்கள்
.
.
ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் “அணை கொடுத்த” மாடுகளை தனியாக
பிடித்து “காயடித்து” உழவு வேலைக்காக “வசக்குவார்கள்”. மேலும் ஒரு சில மாதங்களில் “கிடை” சீசன்
முடிந்தவுடன் எல்லா மாடுகளையும் மீண்டும் மலைக்கு ஓட்டிச்சென்று விடுவார்கள். அணை
கொடுக்காத காளைகளை மிக அதிக விலை கொடுத்து வங்கி தங்களது “பட்டிகளில்” சேர்த்து
விடுவார்கள்.
இது ஒரு சுழற்சி!.
ஜல்லிக்கட்டு என்பது இந்த சுழற்சியில் ஒரு நிகழ்வு மட்டுமே.
இந்த சுழற்சியில் மிக பெரிய அறிவியல் இருக்கிறது.
நாட்டு மாடுகள் பெரும்பாலும் கூட்டங் கூட்டமாக மலைகளில்
வளர்க்கப்பட்டது. அங்கு காளைகளுடன் இயற்கையான இனவிருத்தி நடக்கும்.

அறுவடை காலங்களில் அவை சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு
வயல்வெளிகளில் “கிடையாக” அமர்த்தப்பட்டது. அது ஒரு இயற்கை உரமூட்டல்.
அறுவடை முடிந்த பருவத்தில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு கூடல்.
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வேறுபட்ட காளைகளின் அணிவகுப்பு. அந்த அணிவகுப்பு
முடிந்தவுடன் விளைகொள்ளப்பட்டு தங்களது கூட்டங்களில் சேர்க்கும் “அயல் மகரந்த
சேர்க்கை”.
அந்த மலை மாட்டுக் கூட்டங்களில் சிறந்த “நிகர்” கன்றுகளையோ
அல்லது “நிகர்” காளைகளையோ கண்டேடுப்பதற்காகவே ஜல்லிக்கட்டுக்கு முதல்நாள்
நடத்தப்படும் “பளிஞ்சி மாடுகளின் வாடிவாசல் ஓட்டம.
“கண்டெடுத்த” காளைகளை அல்லது “அணை” கொடுத்த காளைகளை
“காயடித்து” “வசக்குவர்கள்”. காயடித்த காளைகள் இனப்பெருக்கத்துக்கு உதவாது. வண்டி
இழுக்கவும், ஏருக்காகவும் பயன்படுத்துவார்கள்.
குழந்தைகள் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடிப்பார்கள்.
பாலுக்காக மாடுகள் வளர்ப்பது அரிதாக இருந்தது.
மற்றபடி ஜல்லிக்கட்டு ஜாதி பிரிவு அது இது எல்லாம்
“வெள்ளைக்காரன் சொன்னது எப்போதும் சரியாகவே இருக்கும்” என்று நம்பும் “அன்பானவர்களின்”
கண்டுபிடிப்பு.
ஜல்லிக்கட்டின் உயிர்பலி பற்றி கவலை கொள்பவர்கள் தமிழகத்தில்
(இந்தியாவில்) வினாடிக்கு ஒன்றாக நடக்கும் வாகன இறப்புக்கள் பற்றி கவலைப்படலாம்.
ஜல்லிக்கட்டினால் விலங்குகள் துன்பப்படுகின்றது என்று
நினைபவர்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இன்சுலின் எப்படி தயாரிக்கப்படுகிறது
என்று அறிந்துகொண்டு தங்களின் விலங்கு “பாசத்தை” வெளிப்படுத்தல்லாம்.
ஜல்லிக்கட்டு அழிந்தால்
நாட்டு மாடுகள் (காளைகள்) அழியும். நாட்டு மாடுகள் அழிந்தால் என்ன ஆகும்
என்று நம்மாழ்வார் மற்றும் சுரேஷ் பாலேக்கர் முதலானோர்களிடம் கேளுங்கள்!!!..
ஒரு நண்பர் சொன்னார்...
update on 12-01-06.
நண்பர் ஒருவர் என்னதான் இருந்தாலும் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார் அவருக்கான பதில்.
அப்பாவிடம் புண்பட அடிபடாத, 50 வயதில் யாரும்
இருக்கமுடியாது என்று நினைகிறேன். மாடு அடிபட்டதை கண்ட நாம், வீட்டில் பெண்கள்
மாட்டுக்கு பேன் எடுப்பதையும் குழந்தைகள் மாட்டின் கழுத்தில் உறங்கி மாட்டு
மடியில் வாய் வைத்து பால்குடிப்பதையும் பார்த்திருக்க மாட்டோம்.
நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
கணவனுடன் ஒருநாள் சண்டையிட்டால் பெண்களை தனது வீட்டிற்கு
கூட்டி வர பழகிவிட்டிருக்கிறோம். கணவனும் மனைவியும் இருபது ஆண்டுகள் பேசாமல் ஒரே
வீட்டிற்குள் “மனிதாபிமானத்தோடு” வாழ பழகிவிட்டிருக்கிறோம்.
இரவில் புருஷனோடு சண்டையிட்டுபுரண்டு காலையில் அவனுக்கு கால்
அமுக்கிவிடும் மனைவியை, மாட்டை வயிற்று பாட்டுக்காக விற்றுவிட்டு நான்கு நாட்கள்
சாப்பிடாமல் இருக்கும் மனிதனை, பதினைந்து கிலோமீட்டர் தள்ளி விற்கப்பட்டு
இருந்தாலும் பத்து நாள் கழித்து
வீட்டிற்கு வந்து மா என்று கத்தும் மாட்டை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.
மறுபடியும் தடை கிடைத்துவிட்டது. சந்தோசம் தான். அறிவாளிகள்
இன்று டாபர்மேனை மடியில் தூக்கிவைத்து முத்தமிட்டு, முந்திரிப்பருப்பை கொறித்து
ஏசி அறையில் ஒரு கட்டிங் விட்டுக்கொள்ளலாம்.
தென் மாவட்டங்களுக்கே உரிய “பளிஞ்சி” என்ற மாட்டினத்தின்
சுழற்சியின் ஆணி வேரை உடைத்தாயிற்று. பத்து வருடங்களுக்கு முன் ஆயிரங்களில்
இருந்த, இன்று நூறுகளில் இருக்கும் இந்த மாட்டினம் இன்னும் ஐந்து ஆண்டுகளில்
அழியும்.
இதை எல்லாம் ஐந்து
ஆண்டுகள் ஞாபகத்தில் வைத்திருக்க நாமென்ன “மாடா”.
"முட்டாள் பாமர மனிதர்கள் மாட்டைக்கட்டிக்கொண்டு
அழுகிறார்கள்".
Comments