ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் (சி. மோகன்)

 


ஒரு பிரதேசத்தில் மேய்ச்சல் சமூகம் விவசாய சமூகமாக மாற்றம் கொள்ளும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், அதன் மூலம்  ஏற்படும் சமூக, இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் "ஜியாங் ரோங்"ன் புனைவின் வழி சொல்லப்பட்டுள்ளது.  

சீனாவில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து அதுவரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்கு, பழைய பழக்கவழக்கங்கள்  ஆகியவற்றை திருத்தி புதிய புரட்சி சிந்தனையை வளர்ப்பதின் அங்கமாக மூன்று சக மாணவர்களோடு ஜென் சென், மங்கோலியாவின் தொன்மையான மேய்ச்சல் நிலத்துக்கு சென்று அங்குள்ள மக்களோடு ஆடு மேய்க்கிறான்.  

மேய்ச்சல் நிலத்தின் குடித்தலைவர் பில்ஜி. தந்தை போன்று  அவனுக்கு மேய்ச்சல் நிலத்தின் விழுமியங்களை கற்றுத்தருகிறார். 


"டெஞ்சர்" மேய்ச்சல் நிலத்தின் மலைக்கடவுள். ஓநாய்கள் அதன் பாதுகாவலர்கள். 
ஓலோன்புலாக் மேய்ச்சல் சமூகத்தின் உயிர்நாடியான புல் அங்கு பெரிய உயிராகவும் அதனைச் சார்ந்து வாழ்பவை சிறிய உயிர்களாகவும் இருக்கிறது.  

மேச்சல் நிலத்தில் இருக்கும் மான், எலிகள், மர்மோட், கொசு, அங்கு வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகள், குதிரைகள், நாய்கள்,  அதன் மேய்ப்பர்களாக அந்த நிலத்தின் மக்கள். இந்த உயிர்ச் சமநிலையை "டெஞ்சர்" ஓநாய்களின் வழி நிறைவேற்றுகிறார்.  

ஓநாய் அவர்களின் அடையாளம். ஓநாயின் பண்பு அவர்களின் தனித்துவம். ஆனாலும் அவர்கள் ஓநாயை வேட்டையாடுகிறார்கள். அவைகளுக்கும் சமநிலை தேவை என்று டேஞ்சரின் வழி நம்புகிறார்கள். சிறந்த ஓநாய் வேட்டையாளர்களே மங்கோலிய அரசர்களின் படைத்தளபதிகள். ஓநாய்களின் குணாதிசயங்கள் அவர்களின் குறிக்கோள்கள். 

மேய்ச்சல் நிலத்தில் வாழும் குதிரைகள் ஓநாய்களால் விரட்டப்பட்டு, ஓநாய்களின் அறிவால் நுண்ணுணற் வேற்றப்பட்டு, தகுதியற்றவைகள் ஓநாய்களால் நீக்கப் படுகிறது.  மங்கோலிய அரசர்கள் உலகை வெல்வதற்கு மங்கோலிய குதிரைகளே முக்கிய காரணம். 

மேய்ச்சல் நிலத்தின் நாடோடி வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் இடப்பெயர்வை மேற்கொள்கிறார்கள். இலையுதிர்கால, கோடைக்கால, பனிக்கால, மற்றும் முன்பனிக்கால மேய்ச்சல் நிலம் என்று ஒவ்வொரு பருவத்திலுமாக. ஒவ்வொரு இடத்தில் வளரும் புற்களுக்கும் ஒரு இயல்பு. இந்த இடப்பெயர்வே அங்கு மேய்ச்சல் நிலம் அழியாமல் காக்கிறது. 

மேய்ப்பர்களுக்கும் ஓநாய்களுக்கும், கால்நடைகளை வைத்து ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த போராட்டம் அவர்களை உயிர்ப்புடனும் தகுதியுடனும் வைத்திருக்கிறது. 


கொஞ்சம் கொஞ்சமாக தொன்மையான மேய்ச்சல் சமூகத்தின் விழுமியங்களுடன், இயற்கையின் ஒவ்வொரு உயிரும் கொண்டிருக்கும் ஒத்திசைவும் ஜென்க்கு குடியின் தலைவர் "பில்ஜி" யின் வழியாகத் தெரியவருகையில் அதன்பால் ஈர்க்கப் படுகிறான். 
....

ஒரு பனிப்புயல் நாளில் ராணுவ குதிரைப் பிரிவின் அத்தனை குதிரைகளும் ஓநாய் கூட்டத்தால் கொல்லப்படுகின்றன. அங்கு வரும் ராணுவ படைப்பிரிவின் இயக்குனர் பவோ, ஓநாய்களை அழித்தொழிக்க உறுதி கொள்கிறார். 

அங்கு ஓநாய் இல்லை என்றால், மர்மோட்களின் எலிகளின், மான்களின் எண்ணிக்கை பெருகிவிடும் அதனால் மேய்ச்சல் நிலம் பாலை நிலமாகிவிடும் என்கிறார் பில்ஜி. 

எலிகளை அழிக்க விஷம் தலைநகரிலிருந்து கொண்டு வரலாம், மார்மோட்கள் மற்றும் மான்கள் பெருகினால் எங்களுக்கு நல்ல உணவுதான், இன்னும் பழமையான இந்த எண்ணங்கள் மாறவேண்டும் என்று ராணுவ வீரர்களால் எள்ளப்படுகிறார். 


பில்ஜி யின் எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் மீறி, புதிதாக குடியேற்றம் செய்யப்பட்ட ராணுவ வீரர்களால் பெரிய எண்ணிக்கையில் ஓநாய்கள் கொல்லப்படுகின்றன. மிச்சம் உள்ள ஓநாய்கள் வடக்கு எல்லையில் உள்ள மங்கோலிய பகுதிக்கு ஓடி விடுகின்றன. 

 நிலையான வாழ்க்கை நோக்கைக் கொண்ட விவசாயம் செய்பவர்கள் ஓலோன்புலாக்ல் குடிவருகிறார்கள்.

மேய்ச்சல் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. அங்கு ட்ராக்டர்கள், முதலிய விவசாய உபகரணங்கள் வருகிறது. 


அந்த நிலம் மேய்ச்சல் நிலமாக இருக்கும் போது அன்னப் பறவைகள், மற்றும் காட்டு வாத்துக்கள் நிறைந்த இயற்கையான நீர்நிலை விவசாய குடிகளால் சூறையாடப் படுகிறது. மேய்ச்சல் நிலத்தின் புனிதப் பறவை அன்னம் புதிதாக குடிவந்த மக்களால்  உணவுக்காக கொல்லப்படுகிறது. 

குறைந்த காலத்துக்குள்ளாகவே வளமான மேய்ச்சல் நிலம் அதனைச் சார்ந்திருக்கும் அத்தனை உயிர்களோடும் சூறையாடப்படுகிறது. அதன் குடித்தலைவரான பில்ஜி ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் அழுகிறார். அவரின் நம்பிக்கைகள் அத்தனையும் கண்முன்னாலேயே சரிந்துவிடுகிறது. 
.....

சீனனான ஜென் சென், ஓநாய்களை புரிந்து கொள்வதற்காக அதன் குட்டியை எடுத்து அவன் குடிலின் பட்டியில் வளர்க்கிறான். பெரிதானதும் வீட்டில் இருக்கும் நாயுடன் இணை சேர்த்து சக்தி மிகுந்த காட்டு நாயை உருவாக்க எண்ணுகிறான். 

பில்ஜி, ஓநாய் சுதந்திர தன்மையோடு, அடங்காத இயல்பு கொண்ட டேஞ்சரின் உயிர், அது எப்படி மலங்களை உண்ணும் நாயுடன் சேரும் என்கிறார். ஜென்னின் பிடிவாதத்தாலும்  அவனுக்கு ஓநாய் மேல் இருந்த தீவிர பற்றை அறிந்தாலும் பில்ஜி சம்மதிக்கிறார். 

ஒருமுறை ஜென் ஓநாயுடன் நடை செல்லும் போது, சக ஓநாயின் அழைப்பு கேட்டு ஜென்னிடமிருந்து தப்பிக்க நினைக்கிறது. தடுக்கும் ஜென்னை கடித்து விடுகிறது. அதனால் ஜென் ஓநாயின் கூர்மையான பற்களை வெட்டிவிடுகிறான். அதன் ஒருபல்லில் தொற்றும் ஏற்பட்டு விடுகிறது. 

பற்கள் வெட்டப் பட்டு, பட்டியில் கட்டப்பட்ட ஓநாய்க்கு, மற்றைய ஓநாய்கள் போல சத்தமிட , வேட்டையாட முடியாமல் போகிறது. குற்றவுணர்ச்சியுடன்  முதிய வயதுவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜென்னிடம் " ஓநாயின் நிஜமான உத்வேகங்களைக் கொண்டிருக்கும் இந்நிலையிலேயே கொன்றுவிடு" என்கிறார் பில்ஜி. "சீனர்களாகிய உங்களால் ஒருபோதும் மங்கோலிய ஓநாய்களைப் புரிந்துகொள்ள முடியாது" என்று கோபப்பட்டு கத்துகிறார். 

 பட்டியிலிருந்து ஓநாய் தப்பிக்க முயற்சி செய்து, கழுத்து நெறிப்பட்டு நோயுறுகிறது. இறுதியில் வேறு வழிஇல்லாமல் ஜென் அதனை டெஞ்சருக்கு அனுப்புகிறான். 

முதியவர் பில்ஜி தலைமை ஓநாயின் குணங்களோடு இருப்பவர். ஜென் வளர்க்கும் ஓநாய் போலவே முதியவர் பில்ஜியும் சூழ்நிலைக் காரணங்களால் அதன் இயல்புக்கு பொருந்தாத, தடுக்கமுடியாத ஒன்றுடன் போராடி டெஞ்சருடன் சேர்க்கிறார். 


ராணுவ அதிகாரி நினைத்தது எல்லாம் நடந்தேறுகிறது. சிறிது காலத்திலேயே மேய்ச்சல் நிலம் செம்மணல் மேடாகிறது. உயிர்த்தன்மையற்ற வாழ்வால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. தலைநகர் மணற்புயலால் அடிக்கடி மூடப்படுகிறது. 


கதையை வாசித்து முடிக்கும் போது ஜெயமோகனின் "விசும்பு" நினைவில் வந்தது. 

Comments

Popular posts from this blog

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.