"விவசாயம்" எங்கே இருக்கிறோம், எங்கே இருக்கிறது.






நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் என்று வரும்போதெல்லாம், மனதின் மூலையில்  soft corner வந்துவிட்டு போவதை உணர முடிகிறது. இது எனக்கு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன். இந்தியாவில் ஒருவர் இன்று என்ன தொழில் செய்துகொண்டிருந்தாலும்  அவரது பாட்டனார் ஒரு விவசாயி என்ற "தொலைதூர" காரணமாகவும் இருக்கலாம்.   

சமீபத்தில் கத்தாரில் ஒரு விவசாய கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கத்தாருக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்??.

  1. கத்தார் ஒரு பாலைவன நாடு. நிலத்தினடியில் இரண்டு அடிக்கு கீழ் தோண்டவேண்டும் என்றாலும் மெஷின் வேண்டும் என்ற சுண்ணாம்பு பாறைகளால் ஆன நில அமைப்பு கொண்டது.
  2. பெரும்பாலான நிலத்தடி நீர் குடிப்பதற்கு லாயக்கற்ற உப்பு தண்ணீர். தங்களது முழு நீர் தேவைக்கும் கடல் தண்ணீரை சுத்திகரிதே பெறவேண்டும் என்ற கட்டாயம் உள்ள நாடு.
  3. கத்தாரில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வெப்பம் சாதரணமாக 40 டிகிரியை தாண்டிவிடும். 

மேலே குறிப்பிட்ட முன்றுமே விவசாயத்திற்கு உகந்தவை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.    

இருந்தாலும் இன்று கத்தரில் கிட்டத்தட்ட 30 சதவிகித காய்கறிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தங்களது காய்கறி தேவைகள் அனைத்தையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து மிக வேகமாக அதனை அடைய முயற்சி செய்கிறது.  



அதுமட்டுமல்ல 2030 வருடத்துக்குள் தங்களது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் முனைப்பு கொண்டுள்ளது. 

மண்வளம், மலைவளம், நீர்வளம் (மனித வளத்தையும் இத்தோடு சேர்த்துக்கொள்ளலாம்) இந்த மூன்று விவசாய ஆதாரங்கள் இல்லாமல் எப்படி ஒரு பாலைவனத்தில் இத்தகைய இலக்குகள் சாத்தியமாகிறது என்பதில்தான் இன்றைய நமது விவசாயத்தின் மறுபக்கம் இருக்கிறது. 

புதிய தொழில்நுட்பங்கள்.

மற்ற துறைகளைப் போலவே விவசாயத்திலும் தொழில் நுட்பம் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஹைட்ரோபோனிக்ஸ் (Hydrophonic)  என்ற மண்ணற்ற தொழில் நுட்பம். 

மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் இந்த முறையில்  பயிர் ஊடகமாக தென்னை நார் கழிவுகளை பயன்படுத்துகிறார்கள். 


மேலும் சில வகைகளில் perlite, rockwool போன்றவைகளும் பயன்படுத்த படுகிறது. இன்னும் மேம்படுத்தப்பட்டு எவ்வகை ஊடகமும் இல்லாமல் தண்ணீரை மட்டும் ஊடகமாக கொண்டு தாவரத்தை மிதக்க விடுகிறார்கள்.


பத்து ஏக்கர் நிலப்பகுதியில் கிடைக்கும் விளைச்சலை, சில நுறு அடிகளில், குறைந்த மனித உழைப்பைக் கொண்டு  விளைவிக்கிறார்கள்.


சுற்றுச்சுழல் பாதிப்பில்லாமல், குறைந்த நோய்தாக்குதலோடு சுத்தமானதாக காய்கறிகள் கிடைக்கிறது. 


இதில் குறை எனசொன்னால், பயிருக்கு தேவையான நுண்னுட்டங்கள் அணைத்தும் வேதி உப்புக்களால் செயற்கையாக சமநிலை செய்யப்படுகிறது. (இப்போது செயற்கை உரம் போட்டு செய்யப்படும் விவசாயமும் செயற்கையாகவே விளைவிக்கப்படுகிறது).

மேலும் வெள்ளரி, புதினா, கீரை வகைகள், தக்காளி போன்ற சில வகையான தாவரங்கள் மட்டும் இப்போது உற்பத்தி செய்வதற்கு தொழில்நுட்பம் உள்ளது. வரும் காலங்களில் இத் தொழில் நுட்பம் மேம்பாடு செய்யப்பட்டு அதிக உற்பத்தியும் இயற்கை வழியும் சாத்தியப்படலாம். 



Aquaphonic தொழில்நுட்பம். 

இது ஹைட்ராபோனிக்கின் சற்று இயற்கை முறை எனலாம். மீன் தொட்டியில் வளர்க்கப்படும்; அதன் கழிவுகள் ஹைட்ராபோனிக் தாவரங்களில் பயன்படுத்தப்படும்.  

இந்த முறையில் இருக்கும் சிக்கலான மீன், தாவர வாழ்வியல் தொடர்புகளால் தொடக்க நிலையிலேயே இருக்கிறது.  

இது போக aerophonic என்று ஒரு வகையும் இருக்கிறது.

தவிர மாடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான பச்சை கீரைவகைகளையும், கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றை மண்ணில்லாமல் முளைக்க வைத்து கொடுக்கும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து வருகிறது. 

மேற்கண்ட அணைத்து தொழில்நுட்பமும் விவசாயம் என்றால் மண், மழை, தகுந்த காலநிலை இருந்தால் மட்டும் சாத்தியம் என்ற நிலையை மாற்றி யாரும் எங்கும் விவசாயம் செய்யலாம் என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது. 

விவசாயம் இயற்கையா. 

உலகில் காடுகள் முதன்முதலில் அதிகமாக ஆழிக்கப்பட்டது விவசாயம் செய்வதற்காகத்தான். மேலும் செயற்கை உரங்கள் தயரிப்பதர்க்காக படிம எரிபொருட்கள் (fossil fuel) மிக அதிகமாக பயன்படுத்த படுகிறது. அதுமட்டுமல்ல விவசாயம் சார்ந்த உழவு, அறுவடை, உற்பத்தி என்று அதற்காக எரித்தழிக்கும், படிம எரிபொருட்களை கணக்கில் கொண்டால் கண்டிப்பாக உணவு உற்பத்தி என்பது இயற்கையை மாசுபடுத்துவதில் எந்த தொழிற்சாலைக்கும் குறைந்தது அல்ல. 

நாம் எங்கே இருக்கிறோம்.

உலகத்திலேயே மிகப்பழமையான, இன்றும் பயன்படுத்தப்படும் மனிதக்கண்டுபிடிப்பு என்று உழவர்கள் பயன்படுத்தும் "ஏர்" என்பதை சொல்லிவிடலாம். இன்னும் தண்ணீரை இலவச மின்சாரம் கொண்டு, அல்லது காவிரிநீர்கொண்டு  "அளவில்லாமல்" (flooded irrigation) தாவரங்களுக்கு கொடுத்தால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்குத்தான் இந்தியாவில் விவசாய தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டுள்ளோம்.

இன்று ஒரு பத்து ஏக்கரில் உருவாக்கப்படும் விளைச்சலை சில நுறு மீட்டரில் விளைவிக்கமுடிந்தால், அதுவும் மிகக்குறைந்த நீர் ஆதாரத்தைக் கொண்டு செய்யமுடிந்தால், காவிரிக்காக சண்டை போடவேண்டி இருக்காது. மிச்ச நிலங்களை காடுகளாகவும், மக்களுக்கான மற்றைய பயன்படுகளுக்காகவும் உபயோகப்படுத்த முடியும். அதற்க்கான தொழில்நுட்பமும் இன்று இருக்கிறது. 

எழுத்தாளர் சமஸ் இதை சில நாட்களுக்கு முன்பு தனது விவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்! என்ற  கட்டுரையில் தொட்டுச்சென்றிருந்தார்.


அரசியல் சார்ந்த நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், விவசாயம் தொடர்பான பார்வையில் மாற்றம் வேண்டும் என்றே நினைக்கிறேன்.   

அன்புடன், 
சி. பழனிவேல் ராஜா.

Comments

Popular posts from this blog

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.